கோயில்கள்

கோயில்கள் - ஒரு பார்வை

இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.




பிள்ளையார்பட்டி - கற்பக விநாயகர்


மூலவர் : விநாயகர்
தல விருட்சம் : மருதமரம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : பிள்ளையார்பட்டி
மாவட்டம் : சிவகங்கை
மாநிலம் : தமிழ்நாடு.

திருவிழா:

ஒவ்வொரு சதுர்த்தியன்றும் இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார். திருக்கார்த்திகை அன்று விநாயகப் பெருமானும், உமாதேவி சமேத சந்திரசேகரப் பெருமானும் திருவீதி பவனி வருவார். பிள்ளையார், மருதங்குடி நாயனார் சன்னதிகளில் சொக்கப்பனை கொளுத்தப்படும். மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருவார். ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தியே இங்கு பெரிய திருவிழாவாகும். இது 10 நாள் திருவிழாவாக நடக்கும். பிள்ளையார் சதுர்த்திக்கு 9 நாட்களுக்கு முன்பு காப்புகட்டி, கொடியேற்றம் நடக்கும். 10ம் நாள் காலையில் தீர்த்தவாரி உற்சவமும், உச்சிகால பூஜையின் போது ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியமும், இரவு ஐம்பெருங்கடவுளரும், தங்க, வெள்ளி வாகனங்களில் திருவீதி உலா வருவர்.

தல சிறப்பு:

விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவறைக்கோயில். இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுகிறது.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு விநாயகர் திருக்கோயில், திருப்புத்தூர் தாலுகா, பிள்ளையார்பட்டி - 630207, சிவகங்கை மாவட்டம்.

போன் எண் :+91-4577 - 264240 / 264241.

பொது தகவல்:

காலத்தால் பழமையான இது ஒரு குடைவரை கோயிலாகும். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் அர்ஜுன வன திருத்தலங்கள் நான்கு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ""தி ருப்புடைமருதூர்'' தஞ்சை மாவட்டத்தில் ""திருவுடைமருதூர்'', ஆந்திர மாநிலத்தில் ""ஸ்ரீசைலம்'' சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி ஆகியவையாகும்.

பிரார்த்தனை

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

தேர்த்திருவிழா :

விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒருசில இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும். பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும் மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செல்வர். சண்டிகேசுவரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வர். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வர். இத்திருவிழா 9ம் நாள் நிகழ்ச்சியாக நடக்கும்.

9ம் நாள் விழாவான தேர்வலம் வரும் அதே நேரத்தில் மூலவருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதால் அக்காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். மகா அபிஷேகமும் நடத்தப்படும்.

ராட்சத கொழுக்கட்டை: ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ஒரே கொழுக்கட்டை தயாரித்து நைவேத்யம் செய்வர். இது மிகவும் சிறப்பு பெற்றதாகும்.

18 படி அரிசியை மாவாக்கி, எள் 2 படி, கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, பசுநெய் 1 படி, ஏலம் 100 கிராம், வெல்லம் 40 கிலோ ஆகியவற்றை சேர்த்து ஒரே கலவையாக்கி, உருண்டை சேர்த்து அதனை துணியால் கட்டி, மடப்பள்ளியில் அன்னக் கூடையில் வைத்து கட்டுவார்கள். தண்ணீர் நிரப்பப்பட்ட அண்டாவினுள் இறக்கி அதன் அடிப்பகுதியில் படாதவாறு தொங்கவிட்டு மடப்பள்ளி முகட்டில் கயிற்றால் கட்டி விடுவர்.

பின்னர் அது, அந்த பெரிய அளவிலான பாத்திரத்தில் 2 நாள் தொடர்ச்சியாக வேக வைக்கப்படும். பின்னர் இது உலக்கை போன்ற கம்பில் கட்டி பலர் சேர்ந்து காவடி போல தூக்கி வந்து மூலவருக்கு உச்சிகால பூஜையில் நிவேதனம் செய்வர். மறுநாள் கொழுக்கட்டை சூடு ஆறிய பின்னர் நகரத்தார், ஊரார்கள் மற்றும் பணியாளர்களுக்கு பிரித்து உண்ணக்கொடுப்பர்.